×

மாற்றுத்திறனாளியை அடித்துக்கொன்ற மாமனார், மருமகனுக்கு ஆயுள் ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பெரணமல்லூர் அருகே குழந்தைகளை பயமுறுத்தியதால்

ஆரணி, நவ.30: பெரணமல்லூர் அருகே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியை மரத்தில் கட்டி வைத்து அடித்துக்கொன்ற மாமனார், மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கோனையூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்தமஜோதி, விவசாயி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகள்களும், ஏழுமலை(25) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் ஏழுமலை என்பவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் குழந்தைகளை கேலி, கிண்டல் செய்து கொண்டு பயமுறுத்தி விளையாடுவது வழக்கமாம். இதனால் இவரை கண்டாலே குழந்தைகள் பயந்து ஓடி மறைந்து கொள்வார்களாம்.

அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(31), விவசாயி. இவரது குழந்தைகளை ஏழுமலை அடிக்கடி பயமுறுத்தி விளையாடுவது வழக்கமாக வைத்திருந்தாராம். ஏற்கனவே ஒருநாள் வெங்கடேசன் வீட்டிற்கு சென்ற ஏழுமலை, அவரை உள்ளே வைத்து வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். இதனால் வெங்கடேசன் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 23.10.2018 அன்று ஏழுமலை மீண்டும் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று, குழந்தைகளை பயமுறுத்தி விளையாடி உள்ளார். உடனே அந்த குழந்தைகள் வீட்டில் இருந்த தந்தை வெங்கடேசன், தாத்தா சேகர்(55) ஆகியோரிடம் ஏழுமலை பயமுறுத்தியது குறித்து அழுது கொண்டே தெரிவித்தனர்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த வெங்கடேசன், அவரது மாமனார் சேகர் ஆகிய இருவரும் வெளியே வந்து ஏழுமலையை பிடித்து கண்டித்தனர். பின்னர், அவரை அருகில் இருந்த மரத்தில் கட்டிப்போட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை இருவரும் தூக்கிச்சென்று அவரது வாசலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மயக்க நிலையில் கிடந்த ஏழுமலையை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஏழுமலை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஏழுமலையின் தந்தை உத்தமஜோதி(75) பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சேகர், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் நடந்தது. அரசு வழக்கறிஞர் கே.ராஜமூர்த்தி வாதிட்டார். தொடர்ந்து, இருதரப்புவாதங்களை கேட்ட நீதிபதி, வாய் பேசாத மாற்றத்தினாளி வாலிபரை மரத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக வெங்கடேசன், சேட்டு ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். ேமலும், அபராத தொகையை கட்ட தவறினால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மாற்றுத்திறனாளியை அடித்துக்கொன்ற மாமனார், மருமகனுக்கு ஆயுள் ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பெரணமல்லூர் அருகே குழந்தைகளை பயமுறுத்தியதால் appeared first on Dinakaran.

Tags : Arani court ,Peranamallur ,Arani ,
× RELATED பள்ளிகளில் டிஇஓ ஆய்வு பெரணமல்லூர் வட்டார